Tuesday, January 19, 2016

முசௌரி

(1978ல் எழுதிய கவிதை )

அகம்புறமாய்  நிலவாழ்வைப் பிரித்துச் சொன்னார்
அத்தோடு நிலத்திணையும் வகுத்து வைத்தார்
ஐந்தாகி நிற்கின்ற நிலப்பிரிவில் அழகின்
மைந்தான நிலமொன்று குறிஞ்சிஆகும் 
குன்றாமல் நிமிர்ந்த தமிழ்க் கோடைக்கானல்
குறையாத வளம்சேரும் உதகைநாடு 
சென்றோடி வரல்வேண்டும் என்றுமனம் சொல்லும்
ஆனாலும்  சென்றதுவோ முசௌரி | அதைநான்
சொன்னாலும்  புகழுண்டு ; எனக்குத்  தான்
தலைநகராம் இந்தியத் தாய்க்குத் தலையான
தில்லிநகர் தனிலிருந்து புறப்பட்டோம் ; இமயக்
குன்றுகள் சிந்திய எச்சிலோ கங்கை ,
யமுனைகள்? மழலையோ அவற்றின் சலனங்கள்?

கங்கை நதியோரம்- காவிகளின் அரிதுவாரம்
சென்று கண்டோம்-சேர்வதற்கு வேண்டுமென
முழுக்காட வந்திருந்தார் . சென்றதனால்  நாங்கள்
முழுக்காடி மகிழ்ந்திருந்தோம் .பனியுருக்கில் நீராடி
பார்த்த பின்னர்நம்  பண்டிதர்க்குப் பிடித்த
தேராதூன்  செல்வ தானோம் தேராது
 ஊண்என்று எண்ணி நாங்கள் தேராதூன்
சென்றவுடன் கம்பளியால் போர்த்துக் கொண்டோம் 
முகிலெடுத்து முட்டாங்கு போட்டி ருந்தாள் 
இமயப்பெண் | முந்தானை நெளிவைப் போன்றே
வளைந்துசெலும் சாலையதன் வனப்பைக் கண்டோம்     
முந்தானை அழகினிலே மயக்கம் கொண்டு
முகத்தழகைக் காண்பதற்ககுச் சித்தம் கொண்டோம்
முசெளரி நகருக்குப் பயணம் ஆனோம் 

தணியாத ஆர்வத்தால் உந்தப் பட்டுத்
துணியாத நெஞ்சத்தில் துணிவைத் தேக்கி 
வாராத இன்பத்தின் வரவை நாடித்
தாழாத முயற்சியினால் வந்து சேர்ந்தோம் 
தாழாத குன்றுகளை மேகம் மூடத்
தவிட்டுக்குள் முட்டைஎனப் பொலிவு பெறும்
புவிச்சிறந்த முசெளரி நகரம் தன்னை
பனிமலைகள் சாரலெனும் பன்னீர் தூவிக் 
கனிவான வரவேற்புச் சொல்லக் கண்டோம்

பசுவைப்போல் மேய்ந்துவரும் மேகக் கூட்டம்
பசுமைநிறப் பாலைத்தான் பெய்ததுவோ அங்கே
மதிலைப்போல் வலியதுவாய் நின்ற மேகம்
விரைந்துவரும் வேகத்தால் மானே ஆகும் 
இயங்கிகளை மறிக்கின்ற தன்மை சொன்னால்
இமயத்தில் மேகங்கள் எருமை தானே
புவிமகளின் கண்மறைக்கும் படலம் மேகம்
ஒளியென்னும் நீர்கொண்டு கழுவல் வேண்டும்

பச்சைப் போர்வைக்குள் படுத்திருந்தான் மலையரசன்
வெஞ்சாமர முகிலை வீசுகிறாள் வானரசி
துஞ்சா எழுப்புதற்குத் தூண்டுகிறாள் கதிரொளியை
அருவித் தோழியர்கள் பள்ளி பாடுகிறார் 
அழகுத் திருக்கோலம் அங்கே கண்டேன்
இவ்விரண்டு விழிப்பயனை அன்றே பெற்றேன்
வண்ணங்கள் எத்தனை எண்ணங்கள் அத்தனை
கற்பனை வானில் களிச்சிறு தும்பி
கற்பனை விரிந்தது காட்சிகள் மாறின
வானமகள் தலைவாரத் தவழகூந்தல் கருமேகம்
உதிர் நரையே வீழ்ச்சி களும் 

ஆவி  உருவத்தில் வந்தாள் ஒருத்தி
எட்டிப் பிடித்தேன் கிட்டிட வில்லை
தொட்டுப் பார்த்தேன் துவண்டா ளில்லை
ஆரெனக் கேட்டேன் மென்னகை செய்தாள்
மான்எனச் சொன்னாய் அதுநான்எனச் சொன்னாள்   
கதகதப்பை மட்டுமவள் தந்தா ளில்லை
இதழோரம் வந்தென்னைக் குளிர வைத்தாள்
இதழிருந்த ஈரத்தை ஒற்றிக் கொண்டாள்    
கதகதப்பாய் கம்பளிக்குள் ஒளிந்து கொண்டேன்
கதவுகளைத் தட்டியவள் குறும்பு செய்தாள்
கனவைப்போல் மிதந்துவரும் கலையில் வல்லாள்
நனவிலெனை மயக்குகிற  கலையும் கற்றாள்

பஞ்சைப்போல் பொதிபொதியாய் அலையும் மேகம்
பார்வைக்குள் துணியாக நெய்யப் பெற்றே
நெஞ்சுக்குள் ஓவியத்தைத் தீட்டும் போது
நிறைவான கற்பனைக்குச் சீலை ஆகும் 
குஞ்சுகளைக் கோழியது காத்தாற் போலே   
குளிர்ச்சியினை மேகங்கள் காத்த தோடு
தஞ்சமெனக் களித்தகொடை போற்றி நானும்
தமிழ்வளத்தை வரம்பெற்றுப் பாடி வைத்தேன்
காலையிலே  கண்விழித்துப் பார்த்த போது 
அரிசிமாச் சிந்தியதாம் ஆப்பக் கடையிலென
எங்கும் பனிசிந்தி வெள்ளைநிறம் தோன்றும் 
ஞாயிறெனும் வேலைக்காரி ஒளிக்கையால் சுத்தம்செய்தாள்
தூய்மை அங்கே நகராட்சி ஆனது

விழுந்துதிர்ந்த கருமுடியே வளைந்துசெலும் சாலைகளும்
விரைந்தோடும் பேன்கள்தாம் வழிச்சேர்ந்த ஊர்திகளும் 
விரித்துவைத்த கம்பளமே விளைந்திருக்கும் பசுங்காடு 
மணல்வீடு கட்டி நெய்தல் விளையாட
மலைவீடு கட்டியிங்கே குறிஞ்சி விளையாண்டாள் 
குற்றுச் செடிபோல் குடிசை வீடுகள்
குன்றிமணிச் சிதறல்போல் குன்றெலாம் தோன்றக்
கொள்ளை அழகு கொப்பளிக்கும் அங்கே

பஞ்சவண்ணக் கிளியென்று சொல்வ துண்டு
பஞ்சமிலா வண்ணம் பட்டாடை கட்டிப்
பள்ளிசெலும் பிள்ளை பலவண்ணக் கிளியாகும்
பாடலொன்றில் பாவேந்தர் சொன்ன தைப்போல்
தலைவாரிப் பூச்சூடிப் பின்னர் பாட
சாலைக்குப்  போவென்று சொன்னார் அவரன்னை  
கலைமேவும் சொற்கள் கவியான உண்மை

சுற்றித் திரியும் சாலைகள் உண்டு
சறுக்கி விளையாட  சாலைகளே  போதும்
இலக்கியக் கூட்டம் நடைபெறும் இடம்போல்
நெருக்கம் இல்லாக் கடைத்தெரு உண்டு
நெருக்கம் என்பதேன் அங்கே இல்லை
நெருங்கத் தெரியாக் காரணத் தாலா
நேரான குடும்பநலம் பேணுவதால் என்போம்.







Wednesday, January 13, 2016

பொங்கல் வாழ்த்து 2016

காவிரி வரட்டும்
வறட்சி  போகட்டும்
கல்விச்சுமை குறைக்கும்
புரட்சி  நடக்கட்டும்
மனிதனை  நேசிக்கும்
பயிற்சி  தொடங்கட்டும்
மதங்களின் கூச்சல்
முயற்சி  அடங்கட்டும்

பொங்கல் வாழ்த்துக்கள்.