Sunday, October 29, 2017

குறுந்தொகை - பாடல் 18

" வேரல் வேலி  வேர்க்கோட்  பலவின்
சாரல் நாட  செவ்வியை  ஆகுமதி 
யார ஃ  தறிந்திசி  னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந்  தூங்கியாங்கு
இவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே "   
பாடலின் பொருள் :
மூங்கிலாகிய வேலியினையும் வேரின் கண்ணே பழம் பழுத்தலைக்
கொள்ளும் பலாமரத்தினை உடைய மலைச்சாரலை உடைய நாட
செம்மை உடையனாதலைக் கைக்கொள் ; எவர் அதனை அறிந்தார் ?
சாரற் கண்ணே சிறிய கோட்டிடத்துப்  பெரிய பழம் தொங்குவது போன்று
இவளுயிர் மிகச் சிறியது.இவளுற்ற காமமோ பெரிய தாயிருக்கின்றது .
ஆதலின் நூற்றக்  கணக்கான ஊறுகொண்ட ஆற்றிடத்து இரவு வருதலை
இனி விட்டு வரைந்து கொள் 
பாடலைப் பாடியவர் கபிலர்

நயம்: தலைவன்அவளை மணந்து இல்லறம் பேணுவதற்கான உணர்வு எழும் என்பதாம் 

குறுந்தொகை - பாடல் 15

" பறைபடப்  பணிலம் ஆர்ப்ப  இறைகொள்பு
தொன்மூ  தாலத்துப் பொதியில் தோன்றிய   
நல்லூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
செயலை வெள்வேல் விடலையோடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே
பாடலின் பொருள் :
பறைகள் ஒலிக்கவும் சங்குகள் முழங்கவும் கடவுள்தன்
மையைக்கொண்டு பழைய முதிர்ந்த ஆலினைஉடைய
பொதியின்மலைக் கண்ணே ,விளக்கமுற்றுள்ள  நல்லூரை  
இடமாகக் கொண்ட கோசரது சிறந்த மொழி போல உண்மை ஆகின்றது
தோழி . சிறந்த கழலை அணிந்த செயலைத் தளிர் போலும் வெள்ளிய 
வேலையுடைய விடலையோடு கூட்டமான வளையல்கள்
அணிந்த முன்கையினை உடைய மடந்தைக்கு உண்டான  நட்பு  
பாடலைப் பாடியவர் அவ்வையார்     நயம்:
நயம்:
தொடுவளை எனக் கொண்டு தொடுவளை முன்கை என்றாள் தலைவி

தலைவனுடன் கலந்திருத்தலால்

Friday, October 20, 2017

குறுந்தொகை - பாடல் 13

" மாசரக் க  ழீ  இய யானை போலப்
பெரும்பெய லுழந்த இரும்பினர்த் துறுகல்
பைத லொருதலை சேக்கு நாடன்
நோய் தந்தனனே தோழி
பாலை ஆர்த்தன குவளையங் கண்ணே"
பாடலின் பொருள் :
அழுக்கில்லாமல் கழுவிய யானையை போன்றது ,பெரிய மழையினாலே
வருந்திய கோங்கின் பக்கத்தில் உள்ள நெருஙகின மலை கண்பார்க்குத்
துன்பம் உண்டகும்படி ஓரிடத்துத் தங்கும்..நாடன் பிரிந்து நோயைத்
தந்தான் ஆதலின் பசலை நிறைந்தன .குவளை போன்ற அழகிய
கண்களிடத்து .

இந்தப் பாடியவர் கபிலர்

குறுந்தொகை - பாடல் 11

கோடி ரிலங்கு வளை  நாடொறும்
பாடிய கலுழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவன் உறைதலும் முயங்குவ மாங்கே
ஏழுவினி வாழியென் நெஞ்சே முனா அது  
குல்லைக் கண்ணி வடுகர்  முனையது
வல்வேல்  காட்டின் நன்னாட்டு உம்பர்
மொழிபெயர்  தேத்தாராயினும்
வழி விடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே
பாடலின் பொருள் :
சங்கினை அறுத்து செய்த வளையல்கள் நழுவும்படிநாள் தோறும்
பெருமை இல்லனவாய் வருந்தும் கண்களோடு புலம்பி இவ்வகை
தனித்துறைதலும் முயங்குவோம் அவ்விடத்து ஆதலின் இப்பொழுது
வாழ்வாயாக எனது நெஞ்சே எதிரில் கஞ்சம் குல்லை மாலை அணிந்த  
வடுகர் போரிடத்தை உடையதும் வலிய வேலங்காட்டினை உடைய
நல்ல  நாட்டின் மேலிடத்ததுமான மொழியும் வேறான தேயத்தினை
உடையவரானாலும் அவரோடு யானும் உடன்போக்கு வழி
விடுதலை சூழ்வாயாக, அவருடைய நாட்டைக்  குறித்து
படலைப் பாடியவர் மாமூலனார்
நயம் : தன் நெஞ்சிற்குச் சொல்வது போலத் தோழியின் காதில்படக் கூறுகிறாள் .தன் ஆற்றாமையை ஆற்றிக் கொள்ளக் கூறும் உளவியல் இது


Sunday, October 8, 2017

குறுந்தொகை - பாடல் 8

கழனி மாத்து விளைந்துரு தீம்பழம்
பழன வாளை கதூஉ   மூரன்
எம்மிற்  பெருமொழி கூறித் தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே
பாடிய புலவர்  ஆலங்குடி வங்கனார்
பொருள் :வயல் வரப்பிலே உள்ள மாமரத்தினது விளைந்த
தானே வீழ்கின்ற இனிய  பழத்தை பக்கத்துப் பொதுவாகிய
நீர்நிலைச் செருவிலே உள்ள வாளை மீணானது பற்றி உண்ணுதற்கு
இடமாகிய ஊருக்குரிய தலைவன்.அவன் எம் வீட்டிலே முன்  நிற்பவர்
கையையும் காலையும் தான் தூக்கத் தானும் அவ்வாறே
தூக்குகிற கண்ணாடிப் பாவைபோல் தன் மகனுக்குத் தாயாக விளங்குகிற தலைவி அவன் விரும்புகிற வாறெல்லாம் செய்து ஒழுகுகிறாள் போலும்.

நயம்கழனிக் கரையிலுள்ள மரத்திலிருந்து முதிர்ந்து தானே உதிர்ந்த பழத்தை வயலிடத்து வாழை கவ்வினாற்போல , இவ் விடத்திலுள்ள எல்லா இன்பங்களையும் ஊரன் தானே எய்துகின்றான்       



குறுந்தொகை - பாடல் 3

நிலத்தினும் நீரினும்

'நிலத்தினும் பெரிது வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே ''
இதன் பொருள்  நாடனொடு கொண்ட நட்பானது
பெரிது ; உயர்ந்த்தது ' அளவிறந்த ஆழமுடையது எனக்கூறி
அதனையே சிறந்தது எனக்  கூறுகின்றாள்.இதனால்
தலைவன் தலைவியின் பெருங்காதலை உணர்ந்து
அவளை விரைய மணந்து வாழும் வாழ்விலே மனத்தை
செலுத்துபவ னாவான் . குறிஞ்சி 12 ஆண்டு வளர்ந்து மலரும் பூ
அதேபோல் தலைவி 12 ஆண்டில் பூப்பெய்தி நிற்பவள் .  
பாடலைப் பாடியவர் தேவகுலத்தார்
நயம்:
சாரல் மலைப் பக்கம் குறிஞ்சி மரத்தின் கொம்பு கரிய நிறம்
உடைய தாதலின் கருங் கோட் குறிஞ்சி எனப்பட்டது . பூவில் தேனைக்
கவர்ந்து கொண்டு வந்து என்க .தேன் ஆகுபெயராய் இறாலுக்கு ஆயிற்று
தலைவர் என்னை மறப்பாரல்லர் அவர் அன்பு பெரிது என இயற்பட
மொழிந்தபடியாம் . அளத்தற்குரிய தென்பாள் அகலம்,உயரம்,ஆழம்
ஆகிய மூன்றற்கும் தனித் தனியே சிறந்த உவமை எடுத்தோதினாள்

திருவள்ளுவனாரும் ஞாலத்தின் மாணப் பெரிது என்றார்.