Friday, February 16, 2018

குறுந்தொகை - பாடல் 77


"அம்ம வாழி தோழி யாவதும்
தவறெனின் தவறோ இலவே -வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்
அரிய கானஞ் சென்றோர்க்கு
எளிய ஆகிய தடமென் தோளே "

பாடலின் பொருள் :

தோழி கேட்பாயாக பாலைநில வழியே சென்று கள்வராலே கொல்லப்பட்ட அவருடைய உடலை மூடுதற்கு தழையை இட்ட கற்குவியல் நெடிய நல்ல யானைகட்கு செயற்கை நிழலாகப் பயன் படுகின்ற  கடத்தற்கரிய பாலை நிலம் சென்ற தலைவர் பொருட்டு ஆற்றாமையின் மெலிந்து இளைத்த பெரிய தோள்கள் சிறிதும் தவறுடையன ஆக மாட்டா


பாடலை பாடியவர் மதுரை மருதன் இளநாகனார்

குறுந்தொகை - பாடல் 67


''உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலம்கரி கன்னியங் காடு இறந்தோரே"

பாடலின் பொருள் :

கிளி  வளைவாய்க் கொண்ட வேம்பின் ஒள்ளிய  பழம்
ஒருத்தி புதிய நூலினை ஊடு செலுத்தும் பொருட்டு முனை
மாட்சிமைப் பட்ட வளைந்த உயிர்களிடையே கொண்ட
பொன் அணிகலத்தின் ஒற்றைக் காசினை ஒக்கும்
நிலம் கரிந்துள்ள கள்ளியை உடைய பாலை நிலத்தை
கடந்து   சென்ற தலைவர் நம்மை நினைக்கவும் மாட்டாரோ 

பாடியவர் அள்ளுர் நன்முல்லையார்


குறுந்தொகை - பாடல் 65


"வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்
இன்புறு துணையொடு மறுவந்து உகளத்
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
வாராது உறையுநர் வரசைஇ
வருந்திநொந்து  உறைய இருந்திரோ எனவே"

பாடலின் பொருள் :

தோழி ,பரல் கற்களிடையே நின்ற தெளிந்த நீரைப் பருகிய ஆண் மான்
தான் இன்பமென்று கருதிய பெண் மான் இருக்கும் இடத்திற்கு
வந்து விளையாடி நிற்க மழை தரும் கார் பருவம் வந்தது
தலைவர் உளரோ என்று வந்தது


பாடியவர் கோவூர் கிழார்

குறுந்தொகை - பாடல் 62

கோடல், எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறு இதழ்க் குவளை யொடு இடைப்பட விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை  போல 
நறிய நல்லோள்  மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே

பாடலின் பொருள் :

காந்தளினதுஒளியுள்ள அரும்பையும் ,பசிய முல்லையின்
மலரையும் கமழும் இதழ்களை உடைய குவளை மலரோடு
இடையிடப் படக் கலந்து அழகியதாகத் தொடுத்தல்
மாட்சிமைப் பட்ட மாலை போல நறுமணம் உடையவனாகிய 
நல்லாளது மேனியானது காண்டற்கு இன்பம் செய்தலேயன்றி
ஊற்றாலும் தளிரைக் காட்டிலும் வாய்ப்புடையது ஆதலால்
முயங்கற்கும் இனியதே


பாடியவர் சிறைக்குடி ஆந்தையார்