Sunday, January 21, 2018

குறுந்தொகை - பாடல் 59

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் 
அரலைக் குன்றத்   தகல்வாய்க் குண்டுசுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்
நறுநுதன் மறப்பரோ  மற்றே முயலவும்
சுரம்பல விலங்கிய  அரும்பொருள்
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே

பாடலின் பொருள் :

கிளைப் பறவையை இயக்கித் தாளத்தோடு வாசிக்கும் பரிசிலர்
தலைவனது அரலைஎனும் குன்றத்திலுள்ள அகன்ற
வாயை உடைய ஆழமான  சுனையில் பூத்த குவளை
மலர்களுடன் சேர்த்துக் கட்டிய காட்டு மல்லிகைப்
பூக்கள் மணக்கும் நின் நறுமணமுடைய நெற்றியைத்
தலைவர் மறப்பாரோ ? மறக்க மாட்டார் . பல பாலை நில
மறப்பாரோ ? மறக்க மாட்டார் . பல பாலை நில
இடையிட்ட நாடுகளிற் சென்று தேடும் அரிய பொருட்செல்வங்கள்
எவ்வளவு முயன்றாலும் முற்ற முடியக் கிடைக்கப்பெறா
ஆகலின் இனியும் பொருள் தேடுவதற்காக கால நீட்டிப்பு
செய்யார் .விரைந்து திரும்புவார் .வருத்தத்தை  கைவிடு.


பாடலைப் பாடியவர் மோசிகீரனார்

குறுந்தொகை - பாடல் 58

 ’’இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
 நிறுக்க லாற்றினோ நன்றுமற்  றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே

பாடலின் பொருள் :

என்னை இடித்துரைக்கும் நண்பரே தனது வேண்டுகோளை நிறைவேற்று முகத்தான் இத்துன்பத்தை யான் நிறுத்தி ஆற்றியிருப்பேனாயின், மிக நல்லது .அதுவே என் விருப்பமும் .ஆனால் இயலவில்லையே. கை இல்லாத ஊமன் ஒருவன் கண் எதிரே பார்த்துக் காக்கின்ற வெண்ணெயைப் போல இத்துன்பம் , என்னுள் பரந்து அதிகமாகி விட்டது .என்னால் பொறுத்துக்  கொள்ளுவதற்கு அரிதாக இருக்கிறது.


பாடலைப் பாடியவர் வெள்ளி வீதியார்

குறுந்தொகை - பாடல் 54

யானே  ஈண்டை யேனே: யென்னலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி  தூண்டிலி னிவக்கும் 
கானக நாடனொ டாண் டொழிந்தன்றே

பாடலின் பொருள் :

யான் இங்கே தனிமையில் உள்ளேன் .எனது அழகு திணைப்
புனத்தைக் காப்பவரது கவண்கல் ஒலி கேட்டு அஞ்சிக் காட்டு
யானையானது தான் வளைத்த பசிய மூங்கிலைக் கைவிட ,அது மீன்
பிடித்த தூண்டில் மேலே எகிறித் தூக்கப் படுவது போல  
உயரத்தில் நிமிரும் கானக நடனாகிய தலைவருடன்
யான் பழகிய அவ்விடத்திலேயே ஒழிந்து போனது
பாடியவர் பெயர் பாடலில் வரும் உவமையை வைத்து

மீனெறி தூண்டிலார் என்று குறிப்பிடுகின்றன

குறுந்தொகை - பாடல் 52

ஆர்கலி மிதித்த நீர்திகழ் சிலம்பிற்  
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங்  கூந்தல்
நிரந்திலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லெனோ இறையிறை யானே

பாடலின் பொருள்

நாரத்தம் பூ மணக்கும் குவிந்து திரண்ட கரிய கூந்தலையும் 
வரிசையாய் விளங்கும் வெண் பல்லையும் உடைய இளம் பருவத்
தலைவியே வலிமை பொருந்திய ஆண் யானை மிதித்த பள்ளத்தில்
சிறிது நீர் கிடந்து விளங்கும் மலைமீது மகளிரால் விரும்பப் பட்டவன்
நீ நடுங்குவதைப் பார்த்து அவ்வப்போது சிறிது யான் பரிவுகொண்டு
இரக்கம் காட்டி வந்தேனல்லவா அதனால் யான் அறத்தொடு 
நின்றதன் பயனாகத் திருமணம் வந்தது என்று தோழி கூறுகிறாள்


பாடலைப் பாடியவர் பனம்பாரனார்

Friday, January 19, 2018

குறுந்தொகை - பாடல் 50

ஐயவி  அன்ன சிறுவீ  ஞாழல்
செவ்வி  மருதின் செம்மலொடு தாஅய்த்
துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந் 
திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப்
புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே " 

பாடலின் பொருள் :

ஞாழல் மரத்தின் வெண் சிறு கடுகு போன்ற சிறிய பூக்கள் மருத
மரத்தின் சிவந்து முதிர்ந்த மலர்களோடு தரையில் உதிர்ந்து
பரவிக் கிடந்து அவரது ஊரில் உள்ள நீர்த் துறையை அழகு செய்தன 
அவர் முன்பு தழுவிக் கூடிய எனது தோள்கள் முன்கையைக்
கடந்து ஒளி விளங்கும் வளையல்களை நெகிழ்ந்து விழும்படி மெலிந்து
தனிமைத் துன்பத்தையே தனது அழகாகப் பெற்றன


பாடலைப் பாடியவர் குன்றியனார்     

குறுந்தொகை - பாடல் 48

தாதிற் செய்த தண்பனிப் பாவை
காலை வருந்துங் கையாறு ஓம்பென
ஓரை ஆயம் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க ,ன்ன
நசையாகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே ?"

பாடலின் பொருள் :

பூந் தாதுகளால் செய்த மிகுந்த குளிர்ச்சியை உடைய பாவையானது
காலை நேரத்தில் வருந்துகிறது .செயலற்று வருந்தும் அதன்
துன்பத்தைப் போக்குக என்று 'ஒரை என்னும் விளையாட்டின் போது

தோழியர் கூட்டம் தலைவியிடம் கூறியது அதைக் கேட்டும் இத்தகைய தன்மையுடன் வருந்திப் பிரிவாற்றாது பெரிதும் துன்புறுகிறாள் நல்ல நெற்றியை உடைய தலைவி .அவளது பசல நோய் நீங்கும்படி அவள் விருப்பத்திற்கு ஏற்ற பண்பினை உடைய அந்த ஒரு சொல்லை உன்னை விரைவில் மணந்து கொள்வேன் என்று சொல்ல காதலருக்கு  மனம் இசையாதோ

பாடலை பாடியவர் பூங்கணுத்திரையார் 

Tuesday, January 9, 2018

குறுந்தொகை - பாடல் 43

"செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே
ஒல்வான் அல்லன் என்று அவர் இகழ்ந்தனரே 
ஆயிடை இருபேர் ஆண்மை செய்தபூசல்
நல் அராக்  கதுவி யாங்கு என்
அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே

பாடலின் பொருள்:
நம் தலைவர் பிரிந்து செல்வார் என்று எச்சரிக்கையாய் இராது அலட்சியமாய் இருந்து விட்டேன் .சொன்னால் தாங்க மாட்டாள் என்று பிரியுமுன் சொல்லவில்லை .துன்ப உணர்வு இயல்பாகக் கொண்ட என் நெஞ்சம் நல்ல பாம்பு கவ்விக் கடித்ததைப் போல் பெருந் துன்பத்தால் மயக்க மடைகிறது.


பாடலைப் பாடியவர் அவ்வையார்   

குறுந்தொகை - பாடல் 41

" காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து
சாறுகொள் ஊறிற் புகல்வேன் மன்ற 
அந்தம் நண்ணிய   அங்குடிச் சீறூர் 
,மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென் -தோழி அவர் அகன்ற ஞான்றே ."

பாடலின் பொருள்:
தலைவர் பக்கத்திருப்பாராக அப்பொழுது மிகவும் மகிழ்ச்சியுற்று
திருவிழாக் கொண்ட ஊர் பொலிவுறுமாறு போலப் பொலிவுற்று
,மகிழ்வேன் . தலைவர் பிரிந்த பொழுதோ பாலை நிலத்து வழியிலே
பொருந்திய அழகிய குடிசைகளை உடைய சிறிய ஊரின்கண் உள்ள
அணில்கள்  விளையாடுகின்ற தனித்த வீட்டைப் போல பொலிவிழந்து 
வருந்துவேன்.

பாடியவர் பெயர் அதில் வரும் தொடரை வைத்து அணிலாடு முன்றிலார்

என்று வைத்துள்ளனர்