Saturday, September 12, 2015

இராம சிதம்பரம் (1923 – 2009)

31.12.2014 அன்று அவர்களுடைய  91 வது பிறந்த  நாள். எங்களுடைய தந்தையார் ரெமி என்கிற பெயரில் செய்யப்பட்ட வாசனை பொருட்களையும் பிரில் என்கிற பெயரில் செய்யப்பட்ட
எழுது  பொருட்களையும் சிவகங்கை , விருதுநகர், மற்றும் இராமநாதபுரம்  மாவட்டங்களில் அறிமுகம்  செய்து , முகவராக இருந்து 7 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தை கரை சேர்த்தார்கள், அம்மா கனகலட்சுமியின் துணையோடு. . அவர்களுடைய 70 வது பிறந்த நாளில் நான் படித்த கவிதை.





அப்பா ,

தனக்குத்  தானே
முடிசூட்டிக்  கொண்ட
ராஜா  நீங்கள் !
ஐந்தாறு வயதுகளில்  
அன்னை  தந்தை  இல்லை;
பள்ளிப்  படிப்பும்
பாதியிலே - தொடரவில்லை
பார்த்த உலகத்தைப்
படித்துக் கொண்டீர்கள்!

பர்மாவில்  "கை  பழகி "
பார்த்திடுவேன்  ஒரு கை  என்று
கல்லூரிப்  பருவத்தில்
கடை வைத்து  விட்டீர்கள் ;
காரைக்குடி யெல்லாம்
கடைப்பெயர்  சொல்லும் (மெட்ராஸ்  ஸ்டோர்ஸ் )
உங்களுக்கும் அதுவே
பெயராகிப்  போனதுண்டு !



கட்டிய  மனைவி  காலமானதால்
கடையும்  வாழ்க்கையும்  ஆடியதுண்டு
ஆடி முடிந்தபின் ஆவணி  வந்தது
அம்மா உங்களை ஆட்கொண்டார்கள்.
பாதை  புதியது ; பயணம் தொடர்ந்தது
ஊர் சுற்றும்  வேலை  உற்சவமானது
அடுத்தடுத்துப்  பிள்ளைகள்
அடுக்கடுக்காய் சோதனைகள்
ஆனாலும் குடும்பத் தேரை
அம்மாவுடன்  சேர்ந்து
வடம் பிடித்துத் தலம் சேர்த்தீர்கள்.


வடிப்பதற்கு  அரிசி  வாங்கி  மாளாதென்று  
வயலையே வாங்கி வளைத்துப்  போட்டீர்கள்
வருமானம் கருதாமல்  வளர்த்தீர்கள் பிள்ளைகளை
கூடையிலே  பழம் வாங்கி கூட்டுக்குக் காய்போல்
நறுக்கித்  தருமழகை நான்சொல்லத் தேவையில்லை
கறி ,மீன்,முட்டையென்று  வாங்கித்ததரும் கணக்கில்
பணக்கணக்குப்  பார்த்ததில்லை
உண்ணும் கணக்கில் உங்களுக்கோ  சைவம்!


உலகைப்  புரிய வைக்க ஊரெல்லாம் காட்டியதால்
வாங்கிப் புத்தகங்கள் வழியெல்லாம் தந்ததனால்
கொடுக்கல் வாங்கல் எல்லாம் கூறி வைத்ததனால்
தேறினோம் வாழ்க்கையில்தேக்கமில்லை
கல்விப்பயிர்வளரக் காசை விதைத்தீர்கள்
மகனைப்போல் கல்வி மகளுக்கும் தந்தீர்கள்
நல்ல இடம் பார்த்து மணமுடித்து வைத்தீர்கள்



இருந்தும்,
விளம்பரம் கூட வெளிச்சம் தேடுமிக்காலத்தில்
சாதணைப்பட்டியல் ஒரு போதும் போட்டதில்லை
உங்களுக்காக எதையும் ஒதுக்கிக்கொள்ளவில்லை
தங்களுக்காய்  உறவென்று தனியாக யாருமில்லை
எங்களுக்காய் வாழ்க்கை என்றமைத்துக் கொண்டீர்கள்
தானுண்டு கடையுண்டு என்று தவம் தொடர்கிறது !


நம் குடும்பத்தில்
வேரும் நீங்கள் விழுதும் நீங்கள்
பக்தியிலும்  திளைப்பதில்லை; பகுத்தறிவும் பேசவில்லை
விருந்தோம்பல்  சளைப்பதில்லை  விவகாரம் செய்வதில்லை
வரும் நாளும் அப்படியே அம்மாவின் துணையோடு
வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்தி வணங்குகிறேன்!


ஊட்டி வளர்த்த கைகள் வாழ்க!
உயர்த்தி விட்ட தோள்கள் வாழ்க
நீட்டி முழக்கிய பேச்சும் வாழ்க
நித்தமும் புகைத்த இதழ்கள் வாழ்க
உரக்கப் படிக்கும் பழக்கம் வாழ்க
உறக்கம் சொல்லும் குறட்டை வாழ்க
எழுவரைப் பெற்ற தந்தை வாழ்க
எழுபதில் உழைக்கும் இளையவர்  வாழ்க !!


1 comment: