Friday, February 16, 2018

குறுந்தொகை - பாடல் 62

கோடல், எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறு இதழ்க் குவளை யொடு இடைப்பட விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை  போல 
நறிய நல்லோள்  மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே

பாடலின் பொருள் :

காந்தளினதுஒளியுள்ள அரும்பையும் ,பசிய முல்லையின்
மலரையும் கமழும் இதழ்களை உடைய குவளை மலரோடு
இடையிடப் படக் கலந்து அழகியதாகத் தொடுத்தல்
மாட்சிமைப் பட்ட மாலை போல நறுமணம் உடையவனாகிய 
நல்லாளது மேனியானது காண்டற்கு இன்பம் செய்தலேயன்றி
ஊற்றாலும் தளிரைக் காட்டிலும் வாய்ப்புடையது ஆதலால்
முயங்கற்கும் இனியதே


பாடியவர் சிறைக்குடி ஆந்தையார்

1 comment:

  1. தலைவன் தலைவியிடம் பெற்ற இன்பத்தை எண்ணி மகிழ்கிறான்.

    கோடல் என்னும் வெண்காந்தள், முல்லை, குவளை ஆகிய பூக்கள் விரவி வர மென்மையாகத் தொடுத்த கதம்ப மாலை போன்ற மணம் கொண்டது அவள் மேனி. அத்துடன் மாந்தளிர் போன்ற மென்மையும் கொண்டது. அதனால் தழுவுவதற்கு இன்பமானது.

    ReplyDelete