Friday, March 9, 2018

குறுந்தொகை - பாடல் - 78

பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
முதுவாய்க் கோடியார் முழவின் ததும்பிச்
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப
நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றென உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே .

பாடலின் பொருள் :
மலை உச்சியில் தோன்றிய வெள்ளிய அருவி நீர்
அறிவு வாய்த்தலை உடைய கூத்தரது முழவை போன்று ஒலித்து
பக்க மலையின் கண்ணே விளங்குகின்ற மலைகளை உடைய தலைவனே
காமநோய் வெறுக்கத் தக்க தோன்றும் தன்னை சிறிதும் நன்றென உணராத வரிடத்தில் வலிந்து சென்று குறை இரந்து நிற்கும் பெரிய மடமையை
அடைவார்களாக

பாடலை பாடியவர் நக்கீரனார்


2 comments:

  1. இந்தப் பாடலில் காமஉணர்வு ஓர் உயிரினமாக உருவகம் செய்யப்பட்டுள்ளது. காமம் நன்று என்று உணராதவர்களிடத்திலும் சென்று தங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது. தன்னை வரவேற்காதவர்களிடம் சென்று தங்குவது பேதைமைதானே? அறியாதவர்கள் செய்யும் தவற்றினைப் பொருட்படுத்தலாமா? பொறுத்துக்கொள்ள வேண்டுமல்லவா? எனவே காமத்தைப் பொறுத்துகொள்ள வேண்டும். (காமம் துன்புறுத்துகிறதே என்று வருந்தக்கூடாது) - தன் காதலியை எண்ணி எண்ணி மனவேதனைப்படும் தன் தலைவனிடம் பாங்கன் இவ்வாறு சொல்கிறான்.

    மலையில் அருவி கோடியர் முரசு முழக்குவதுபோலக் கொட்டும். பின்பு அது சிலம்பு என்னும் மலைக்காடுகளில் பாயும். இத்தகைய நாட்டுக்குத் தலைவன் என்று தலைவனைப் பாங்கன் விளிக்கிறான். (இது காமம் அருவி போன்றது என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாகும்)

    ReplyDelete
  2. இந்தப் பாடலில் ஓர் உளவியலும் இருக்கிறது. உயர்ந்த பல குணங்களைக் கொண்டவர்கள் கூட, காமம் வந்துற்றபின், தன் நிலை இழிந்து, தன்னை விரும்பாதோர் முன்னும் சென்று இரந்து நிற்பர். இதனைப் பாணன் தலைவனிடம் சொல்லாமல் சொல்கிறான், "மேலிருக்கும் அருவி கீழ் நோக்கிப் பாய்கிறது" என்கிறான்.

    ReplyDelete