Thursday, May 17, 2018

குறுந்தொகை - பாடல் 275

முல்லை ஊர்ந்த கல்லுயர்பு ஏறிக்
கண்டனம் வருகம் ; சென்மோ- தோழி! 
எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல்லார் நல்லான் பூமணி கொல்லோ ?
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல்வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர்மணற் காட்டாறு வரூஉம்
தேர்மணி கொல்?- ஆண்டு இயம்பிய உளவே .

பாடலின் பொருள்
தோழி காளையை உடைய பசுவினங்கள் மாலை ஊரை வந்தடையும் .புல்லை உண்ட நல்ல  பசுக்களின் கழுத்திற்  பூண்டிருக்கும்  மணியோசையோ ?செய்யக்கருதிய செயலைச் செய்து முடித்த நிறைவுகொண்ட உள்ளத்தோடு ,வலிய வில்லை உடைய இளைய வீரர்கள் தன்   இரு பக்கமும், பாதுகாத்தவராக வந்து கொண்டிருக்க , ஈரமாகிய மணலையுடைய காட்டுவழியிலே வரும் தலைவனது தேரின் மணியோசையோ ?முல்லைக்கொடி படர்ந்திருக்கும் கல்லின் மேலாக ஏறி  நின்று  அங்கே ஒலிப்பனவாக உள்ளவை யாவையென யாமும் கண்டு வருவோம் ; வருவாயாக

இப்பாடலை  எழுதியவர் ஒக்கூர்  மாசாத்தி

No comments:

Post a Comment