Thursday, November 20, 2014

விழிகள்

கருப்பு வெள்ளை   சீருடை அணிந்து

விழிப்புடன்  இருப்பார் - "விழிகள் " அவர் பெயர்

குளத்தில் மீனாய்க் குதிக்கும்  விழிகள்

முகத்தில் பதித்த 'சிமிட்டல் ' விளக்குகள்

அந்தியில் வாடி வைகறை மலரும்

அரும்பிலா மலர்கள் ; நெற்றிப்பந்தரில்

நாட்டியம் ஆடிடும் மாதவி மகளிர்

அண்டம் இதுவென அன்னையை  நோக்கி

அகல விரிவன  மழலை விழிகள் ;

மின்னல் கீற்றென ஆணினம் கவர்வன

பாவையின் விழிகள்  - பார்வை மொழி "கள்"

ஆடைச் சுவருள் அழகைத் தேடும்

பருவ விழிகளோ திருட்டு விழிகள்

எரியா விளக்குகள் குருட்டு விழிகள்

நீல விழிகள் இருள்வத னாலே

நிரந்தர இருட்டாய் உலகம் மாறும்

இறப்பவர் விழிகளைக் கொடுத்திடு வாரேல்

இருண்டவர் வாழ்வும் பளிச்சென மலரும் .   

         

No comments:

Post a Comment