Thursday, November 20, 2014

3. துறந்தார் சிறப்பு

" செயற்கரிய  செய்வார்  பெரியர் சிறியர்
 செயற்கரிய செய்கலாதார் . "  

தமிழாசிரியர் பொன்னம்பலம் நல்ல புலமையும் உலக அறிவும் உடையவர்.மேற்கண்ட குறளுக்கு விளக்கம் சொல்லும்போது மாணவர்கள்  செயற்கரிய செய்த பெரியர் ஒருவரைச் சொல்லுங்களேன் என்று கேட்டனர்.ஏன் நம் பெரியாரையே எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

ஈரோடு   வெங்கட்ட நாயக்கரின் மகன் இராமசாமி வைதீகத்தில்   திளைத்த செல்வக்குடும்பத்தில் பிறந்தார்.இளம் வயதில் குறும்புக்காரர் . வீட்டுக்கு வரும் வைதீகப் பண்டிதர்களிடம் வாதம் செய்து அவர்கள் தவறு என்ற  அடிப்படை  அறிவை வளர்த்துக்கொண்டார். காலப்போக்கில் வேத, புராண, இதிகாசங்களைப்  படித்துக் கடவுள்  இல்லவே இல்லை என்கிற முடிவுக்கு வந்தார். கடவுளோடு மதமும் ,மதத்தோடு சாதியும் பின்னிப் பிணைந்திருப்பத்தைக் கண்டார் .கடவுள், மதம் ,சாதி மூன்றையும் ஒழிக்கப் பாடுபட்டார்.


ஈரோடு நகர்மன்றத் தலைவரானர் .அவர் ஆற்றிய பணிகள் ஈரோட்டுக்கு இன்றும்  பயன் தருவனவாக இருப்பது  அவருடைய ஆளுமையை, தொலைநோக்கைக்   காட்டுகிறது. இராசாசி சேலத்தில் வழக்கறிஞராக இருந்தார் .இருவரும் நண்பர்கள்.அவர் பெரியாரை பேராயக் கட்சியில் (காங்கிரஸ்)இணையுமாறு வேண்டினார்.பெரியாரும் அவ்வாறே இணைந்தார்.
 
பேராயக் கட்சியில் தன் உழைப்பால் , அதன் தலைவராகவும் ஆனார் . மகாத்மா காந்தி மதுவிலக்குப் போராட்டத்தை அறிவித்த போது தன் தோட்டத்தில் இருந்த ஆயிரக்கணக்கான   கள் இறக்கும் மரங்களை வெட்டினார் . செல்வக்குடும்பத்தில் இருந்து வந்தாலும் கதர் ஆடையைத் தோளில் சுமந்து  தெருக்களில் விற்றார் . கேரளாவில் உள்ள வைக்கம் என்கிற இடத்தில் தீண்டாமையை எதிர்த்துப் போராடி சிறைத்தண்டனை  பெற்றார்.அவர் கைதான பிறகு , அவர் மனைவி நாகம்மையாரும் , தங்கை கண்ணாமாவும் அப்போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். பெரியாருக்கு "வைக்கம் வீரர் " என்ற பட்டம் கிடைத்தது. வகுப்புவாரி
இட ஒதுக்கீடு தேவை என்று உணர்ந்தார் .பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் அவருடைய தீர்மானம் மூன்றாவது  முறையாகத் தோர்கடிக்கப்பட்டபோது கட்சியை  விட்டு வெளியேறினார். கட்சியை  விட்டு வெளியேறிய  பிறகும் அவருடைய போராட்டம் தொடர்ந்தது.இட ஒதுக்கீட்டுக்கான. முதல் அரசியல் சட்டத்திருத்தம் அவரால் நிறைவேறியது .
                     
தமிழ் எழுத்துக்களை ஆராய்ந்து அதில் சீர்திருத்தம் கொண்டு வந்தார். அதை அரசு நடைமுறைப் படுத்தியது .திருக்குறளைப் போற்றினார். திருக்குறள் மாநாடு நடத்தினார்.ஒழுக்கம் என்பது நீ மற்றவன் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறாயோ அதேபோல் நீ அவனை நடத்துவது தான் என்றார். பக்தி என்பது தனிச்சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து என்றார். மறைமலையடிகள் போன்ற அறிஞர் பெருமக்களுடன் கைகோர்த்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார்.சிறைத்தண்டனை பெற்றார்.

பெண்ணுரிமைக்காகவும் குரல் கொடுத்தார்.தேவதாசி ஒழிப்புச்சட்டம்,சாரதா சட்டம்  ஆகியவற்றைக் கொண்டுவர டாக்டர் முத்துலட்சுமி (ரெட்டியார்)போராடிய போது ,அவருக்கு உறுதுணையாக இருந்தார். எனவேதான், மறைமலையடிகாளரின் மகள் நீலாம்பிகை அம்மையார் உள்ளிட்ட மகளிர் சேர்ந்து அவருக்குப் "பெரியார்" என்கிற பட்டத்தைத் தந்தார்கள் என்று கூறிப் பொன்னம்பலம்
வகுப்பை நிறைவு செய்தார்.


மாணவர்கள் எழுந்து நின்று, தந்தை பெரியார் வள்ளுவர் கூறியதைப்போல  செயற்கரிய செய்த பெரியர் தான் என்று கூறினர்.        

No comments:

Post a Comment