Thursday, November 20, 2014

2. வான்சிறப்பு

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்  துப்பார்க்குத்
 துப்பாய தூஉம் மழை” .

 பாவலர் சமூகப்பணிகளில்  ஆர்வம் உடையவர் .தன்னாலியன்ற தொண்டறத்தைச்
சமூகத்திற்கு ஆற்றும் இயல்பினர் . ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரங்களில்
திருக்குறள் வகுப்பு நடத்துவது அவருடைய பணிகளில் ஒன்று .இளைஞர்கள்
குறளின் பொருளைத் தெரிந்து கொள்வதோடு வினாக்களை எழுப்பித் தங்கள்
அய்யங்களையும் போக்கிக்கொள்வர் .

                
நல்லதம்பியின் மகன் பாவணன் திருக்குறள் வகுப்புக்கு நல்லூரிலிருந்து
நெல்லைக்குச்   செல்வான்..போகும்போது தன் நண்பன் செல்வத்தை
அழைத்துச்செல்வான். இருவரும் பேருத்தில் செல்லும்போது நாட்டு நடப்புகளைப்
 பேசிக்கொண்டே போவார்கள் .
             
பாவலர் வான்சிறப்பு அதிகாரத்தை நடத்தி முடித்த பின் பாவணன் , மழை தானே
உணவாகவும் ஆகிறது என்று வள்ளுவர் சொன்னதற்கு என்ன காரணம் என்று
கேட்டான் .பாவலர் மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவை மட்டும் உண்டால்
போதாது என்றும், நீரையும் அருந்த வேண்டும் என்பது மருத்துவ அறிவியல்
என்றும், இந்த மருத்துவ அறிவு வள்ளுவருக்கு இருந்திருக்கிறது  என்றும் விளக்கிச்
சொன்னார் .            

மேலும் தமிழகம் மழைப்பற்றாக்குறை  உடைய மாநிலம் என்றும் காவிரி நீரையும்
முல்லைப் பெரியாறு நீரையும் சார்ந்திருக்கிறது என்றார் .அண்டை மாநிலங்கள்
திறந்து விடும் நீர் போதுமானதாக இல்லாததால் கடைமடைப் பகுதியில் உள்ள
வேளாண்பெருங்குடி மக்கள்  தங்கள் உழவுத்தொழிலைக் காப்பாற்றப்
போராடுகிறார்கள் .அதே போல் ,சிற்றூர்களிலும் , நகரங்களிலும் மக்கள்
குடிநீருக்காகப்  போராடும் நிலையும் உள்ளது .

மழை பயிர்த்தொழில் செய்வதற்கும் தேவைப்படுகிறது . மனிதன் பருகுவதருக்கும் நீர் தேவைப்படுகிறது. உணவை ஆக்கவும்(சமையல் ) பயன்படுகிறது .எனவே மழை வேண்டிய உணவுப்பொருட்களை ஆக்கித்தருவதோடு  தானே உணவாகவும் ஆகிறது என்று வள்ளுவர் சொன்னது மிகப் பொருத்தமானதே என்று பாவலர் தன் வகுப்பை நிறைவு செய்தார் . இளைஞர்கள் மன நிறைவோடு விடை பெற்றனர் .                 


No comments:

Post a Comment